சென்னை: கடந்த மாதம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்த 3 பயணிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், 10 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் பரிசு பழங்கப்பட்டது. இதற்காக கணினி குலுக்கல் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொலைதூரப் பேருந்துகளில் https://www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு முறை உள்ளது.
இந்நிலையில், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் தவிர மற்ற நாட்களில் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் முன்பதிவு செய்யும் 3 பயணிகளை லாட்டரி மூலம் தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ. 10,000 கடந்த ஜனவரியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இத்திட்டத்தின் மூலம் ஏராளமான பயணிகள் பயன்பெறும் வகையில் கடந்த ஜூன் மாதம் முதல் 13 பயணிகள் தேர்வு செய்யப்பட்டு முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், மற்ற 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி அக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு செய்த பயணிகளில் 13 பேரை போக்குவரத்து துறை செயலாளர் கே.பனீந்திர ரெட்டி நேற்று தேர்வு செய்தார்.
அதன்படி, பயணிகளான உமா மகேஸ்வரி, ஸ்ரீசுதீஸ்னா ராம், சேதுராமன் ஆகியோர் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பயணிகள் ரூ.2 ஆயிரம் பரிசாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர்.மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.