புதுடெல்லி: 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2 விதமான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை அறிமுகப்படுத்துவது குறித்து சிபிஎஸ்இ பரிசீலித்து வருகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு கணிதத்திற்கு ஸ்டாண்டர்ட் மற்றும் அடிப்படை என இரண்டு வகையான பாடத்திட்டங்களை வழங்க பரிந்துரைத்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தப் பாடத்திட்டத்திற்கு சிபிஎஸ்இ பாடத்திட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், சிபிஎஸ்இ நிர்வாகக் குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை ஸ்டாண்டர்ட் மற்றும் அட்வான்ஸ்டு என இரு நிலைகளில் வழங்க சிபிஎஸ்இ பரிசீலித்து வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ், கணிதத்தில் தொடங்கி, அனைத்து பாடங்களும் மதிப்பீடுகளும் இரண்டு நிலைகளில் வழங்கப்படலாம். இந்தப் பாடத்திட்டத்திற்கான முன்மொழிவுக்கு பாடத்திட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், இதற்கான முழுமையான செயல்முறை மற்றும் கட்டமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை.