சென்னை: நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும், அரசுகளுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. KYC சரிபார்ப்பு நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பான முக்கிய எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 4 அன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரேஷன் கார்டு உத்திக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை வழங்கியது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் கூடாது.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பொறுமை இழந்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பசிக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் என்று நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா கூறினார். மேலும், இன்னும் ரேஷன் கார்டு பெறாத தகுதியுள்ள நபர்களின் அடையாள விவரங்களை தாக்கல் செய்யுமாறு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்க இ-ஷ்ரம் போர்டல் உள்ளது. பதிவு செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், பல மாநிலங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சரிபார்ப்பை முடித்த மாநிலங்களுக்கு உணவு தானியங்களை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
“இது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறிய நீதிபதிகள், சரிபார்ப்பு செயல்முறையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட செயலாளர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர். இப்பணிகளை அக்டோபர் 31ம் தேதி வரை மட்டுமே முடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு, காலக்கெடு குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக மாநில அரசுகளை அது சாடியுள்ளது. இப்பணிகளை நான்கு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முழு சரிபார்ப்பையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், கூடுதல் அவகாசம் கேட்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இம்மாதம் லட்சக்கணக்கான பிற மாநில தொழிலாளர்களுக்கு தேவையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.