சென்னை: தேனி மாவட்டம் பழனிசெட்டி பட்டியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி கைது வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், சமீபத்தில் துப்புரவு பணியாளர்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டம் குறித்து அவதூறான கருத்துகளை அவர் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சவுக்கு சங்கர் அவதூறான கருத்துக்களை கூறியது உறுதியானது. இதையடுத்து சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு நேற்று கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.