சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புதுச்சேரி-நெல்லூர் இடையே நேற்று காலை கரையை கடந்தது. தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழகக் கரையை கடந்தது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வடக்கே புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே கரையை கடந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களிலும், 20 முதல் 22-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 23-ம் தேதி ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20 மற்றும் 21-ம் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வட்டானத்தில் 6 செ.மீ., தொண்டியில் 5 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, திருத்தணி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தீர்த்தாண்டானம், சென்னை, மணலி, திருவொற்றியூர், நீலகிரி மாவட்டம் பந்தலுார், தேவாளத்தில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.