சென்னை: தமிழகத்தில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பெ.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று (ஆக.21) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 26-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.