சென்னை: வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனமழை பெய்யும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. தொண்டர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 15-ம் தேதிக்குள் அனைத்து மழைநீர் கால்வாய்களும் கட்டி முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மாநகராட்சி நீர்வளத்துறை போன்ற பிற சேவைத் துறைகளுடன் இணைந்து கால்வாய்கள் மற்றும் ஆறுகள் போன்ற நீர்வழிகளை தூர்வாரி சுத்தம் செய்து வருகிறது.
அக்டோபர் 15-ம் தேதிக்குள் அனைத்து மழைநீர் வடிகால்களும் துார்வாரப்பட்டு சுத்தம் செய்யப்படும். மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.