ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 450 படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
32 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், செயல்தலைவர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் நான் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கைதுகள் அதிக அளவில் தொடர்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் 119 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 16 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கூட்டு செயற்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையில் இருந்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்கவும் வலுவான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.