சென்னை: இந்திய அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் நவ., 26-ல், அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:- டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்த நமது அரசியல் சாசனம், ஜனநாயகக் கோட்பாட்டின் கண்ணியத்தை உணர்த்தி, இந்திய நாட்டை வளமான பாதையில் கொண்டு செல்லும் உன்னத படைப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகள், உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைத் தலைமையகங்கள், அனைத்து துணை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசிக்க உத்தரவிட்டுள்ளார்.
அரசு நிறுவனங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 26.11.2024 அன்று காலை 11 மணிக்கு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகள் குறித்த விவாதப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.