சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் சிறந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தியதற்காக, 2024-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த பணிக்குழு விருது, தமிழக சுகாதாரத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த 79-வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தமிழக அரசின் சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நலத்துறைக்கான “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் பயனாளிகளின் வீடுகளில் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 10-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1,80,00,844 பயனாளிகள் முதல்முறை சேவையையும், 3,96,66,994 பேர் தொடர் சேவையையும் பெற்று வருகின்றனர்.
இந்த மதிப்புமிக்க சர்வதேச விருது, தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதற்கும், அடுத்த நிலைக்குச் செல்வதற்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இவ்வாறு கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள வலைப்பதிவு: இந்திய துணைக்கண்டத்தில் முன்னோடி திட்டமாக, நம் அரசு செயல்படுத்தி வரும் மருத்துவ திட்டம் உலக அங்கீகாரத்தை தேடித்தந்துள்ளது.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, கண்காணித்து, மேம்படுத்தி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் சுகாதாரத்துறை செயலர், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.