சென்னை: சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உடைந்த எலும்புகளை மூன்றே நிமிடங்களில் சரிசெய்யக்கூடிய பசையை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். இன்றைய நவீன மருத்துவத் துறையில், ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், எலும்பு முறிவின் தன்மையைப் பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். சில நேரங்களில், அறுவை சிகிச்சை மூலம் உடைந்த எலும்புகளை சேர்க்க/இணைக்க உலோகம் பயன்படுத்தப்படுகிறது.
எலும்பு இணைக்கப்பட்ட பிறகு, பொருத்தப்பட்ட உலோகம் மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், உடலில் உள்ள எலும்புடன் உலோகம் அப்படியே இருக்கும். இந்த சூழலில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலும்புகளை சரிசெய்யக்கூடிய மாற்று பசையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இதை உருவாக்கியுள்ளனர். சிப்பிகள் நீருக்கடியில் சில இடங்களில் உறுதியாக ஒட்டிக்கொள்வதைக் கவனித்த பிறகு, இந்த எலும்பு பசையை உருவாக்கும் யோசனை தனக்கு வந்ததாக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லின் சியான்ஃபெங் கூறினார்.

உடைந்த எலும்புகளை மூன்றே நிமிடங்களில் இந்த பசை மூலம் சரிசெய்ய முடியும் என்று லின் கூறினார். எலும்புகள் குணமடையும் போது இந்த பசை தானாகவே கரைந்துவிடும் என்று அவர் கூறினார். ‘எலும்பு-02’ என்று அழைக்கப்படும் இந்த பசையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு, ஆய்வக சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இதை சுமார் 150 பேரிடம் பரிசோதித்துள்ளனர்.
தற்போது, எலும்பு சிமென்ட்கள் மற்றும் வெற்றிட நிரப்பிகள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், ‘எலும்பு-02’ எலும்புகளை பிணைக்கக்கூடிய பசையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் அறிமுகப்படுத்தப்படும்போது, எலும்பு முறிவு சிகிச்சையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலோக உள்வைப்புகளின் தேவையை நீக்கும்.