பெரம்பலூர்: ஆசிரியர்கள் கூட்டணி எதிர்ப்பு… விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது தொடர்பாக பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இதற்கு ஆசிரியர்கள் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்.,7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்
அதில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பான உறுதிமொழிகள் இடம்பெற்றதுடன், மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை பொறுத்தவரை இதுவரை அரசு பள்ளிகளில் கொண்டாட்டம் போன்றவைகள் நடக்காதபோது இப்போது புதிதாக அறிவிப்பு வந்துள்ளதாக கூறி, ஆசிரியர்கள் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனிச்சையாக அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பிய முதன்மை கல்வி அலுவலர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. அதில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக, சுற்றறிக்கை எதுவும் நேரடியாக வழங்கப்படவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை அடிப்படையில கலெக்டர்கள் அறிவுறுத்தலால் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கலெக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.