சென்னை: தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16 வரை யுஜிசி-நெட் தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தை மத்திய கல்வித்துறை அமைச்சரின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்று தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இந்த ஆண்டு தமிழகத்தின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழா தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகையாகும். இது தமிழ் சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், டிச., 23-ல், மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 13-ம் தேதி முதல், ஜனவரி, 16-ம் தேதி வரை, நான்கு நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளை நான்கு நாட்கள் தமிழ் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். எனவே இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை மட்டுமின்றி 3000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழர் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த பொங்கல் பண்டிகையைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
எனவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், தேர்வர்கள் பலர் சிரமத்தை சந்திக்க நேரிடும். இதே காரணத்திற்காக, ஜனவரி 2025-ல் நடைபெறவிருந்த பட்டய கணக்காளர் தேர்வு ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, UGC-NET தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறு பொருத்தமான தேதிகளுக்கு மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான், அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் எளிதாகத் தேர்வெழுத முடியும்.
முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையின் போது யுஜிசி-நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16-ம் தேதி வரை நடத்தாமல் வேறு பொருத்தமான தேதிகளுக்கு மாற்ற வேண்டும்.இதில் மத்திய கல்வி அமைச்சர் தலையிட்டு யுஜிசி-நெட் நடத்தும் திட்டத்தை மாற்ற வேண்டும். தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் அறுவடைத் திருநாள் கொண்டாட்டங்களின் போது தேர்வுகள் நடத்தப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.