சென்னை: கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. சில்லரை விலையும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ தேங்காய் ரூ. 40 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று, ரூ. 65-க்கு விற்பனையானது. ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக சில்லறை விலையில் ரூ. 90 வரை விற்பனையானது. தேங்காய் வியாபாரிகள் கூறுகையில்:-
”கனமழை மற்றும் நோய் தாக்குதலால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, தேங்காய் வரத்து சுமார் 300 டன் குறைந்துள்ளது. இதுதான் தேங்காய் விலை உயர்வுக்கு காரணம்” என்றார். தமிழக தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது:- இந்தியாவிலேயே தேங்காய் உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கர்நாடகா முதலிடத்திலும், கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தென்னை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

மாநிலத்தில் தென்னை சாகுபடி மற்றும் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தென்னை சாகுபடி பரப்பு 4 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து 4 லட்சத்து 82 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 13 ஆயிரம் தேங்காய்கள் கிடைக்கும். தேங்காய் நேற்று மொத்த சந்தையில் கிலோ ரூ.45 முதல் ரூ. 50 வரை விற்பனையானது. போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதால் சென்னையில் தேங்காய் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.