ஊட்டி : ஊட்டியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவும் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் ஊட்டியில் உள்ள வானொலி நிலையம், நஞ்சநாடு பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை பண்ணை, அணைகள், மருத்துவக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒரு நாள் சுற்றுலா செல்ல வேண்டும்.
பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தவும், வெற்றி பெற்ற மாணவர்களை கொண்டு, ஊட்டியில் நடக்கும் புத்தக கண்காட்சியில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் திறன் பயிற்சி அளிக்க வேண்டும். சிறந்த பெண் குழந்தைகள் திட்டம், குழந்தை திருமணம், டீன் ஏஜ் கர்ப்பம், மருத்துவ முகாம் மற்றும் தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்பட வேண்டும்.
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம், பள்ளிக்கு இடைப்பட்ட குழந்தைகள், வயதுக்குட்பட்ட குழந்தைகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் திறன் பயிற்சி அளிக்க வேண்டும்.
மேலும், மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலம் அனைத்து உள்ளாட்சிகளிலும் ஒரே நாளில் மாரத்தான் ஓட்டம் நடத்த திட்டமிட வேண்டும். மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், ‘பெண் குழந்தையை பாதுகாப்போம்’ திட்டம் குறித்தும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், ஊராட்சி அளவில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டும்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இத்திட்டம் குறித்த தகவல்களை செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் பொதுமக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணாதேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த் டி.காலகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) தீபா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவகுமாரி, கல்லூரி முதல்வர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.