
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:- பென்ஜால் புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நிவாரணத் தொகை ஓரளவுக்கு ஆறுதல் அளித்தாலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாயை மறுபரிசீலனை செய்து ரூ. 10 லட்சம் என அறிவிக்க கோருகிறோம். மேலும், விவசாய சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரத்தை மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும்.

மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கைப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அனைத்து வகையான நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பாதிப்பில் இருந்து முழுமையாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள, கடந்த காலங்களைப் போல் தமிழகத்தை புறக்கணிக்காமல், தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முழுமையாக மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.