சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது ரயில் பாதை பணிகள் அக்டோபரில் முடிக்கப்பட்டு தர ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னக ரயில்வே முதன்மை முதன்மை பணியாளர் நல அலுவலர் கே.ஹரிகிருஷ்ணன், முதன்மை நிதி ஆலோசகர் மாலாபிகா கோஷ் மோகன், சென்னை ரயில்வே மண்டல மேலாளர் விஸ்வநாத் ஐரியா, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 27) சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கடந்த 24ம் தேதி ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ஓய்வூதிய திட்டத்தால் ரயில்வே ஊழியர்கள் உட்பட 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம், உறுதிசெய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் மொத்தத் தொகைப் பலன்கள் கிடைக்கும்.
தற்போது தெற்கு ரயில்வேயில் மொத்தம் 81,311 ஊழியர்கள் உள்ளனர். இதில் 18,605 ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளனர். தெற்கு ரயில்வேயில் உள்ள மொத்த ஊழியர்களில் 62,706 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளனர். இந்த ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் விருப்பத்தைப் பெற தகுதியுடையவர்கள். 25 ஆண்டுகள் பணி முடிந்து ஓய்வு பெறும்போது, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களின் கடந்த 12 மாத அடிப்படைச் சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
ஓய்வூதியத்தில் 60% ஓய்வூதியம் மற்றும் இறப்பின் போது திட்டத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளில் ஒருவர் ஓய்வு பெற்றால், அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 கிடைக்கும். புதிய ஓய்வூதியத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. எனவே இந்த திட்டத்தில் சேர ஊழியர்கள் தயாராக உள்ளனர்.
சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், பணி தாமதமானது. அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தர ஆய்வு செய்யப்படும். பெரம்பூரில் 4வது ரயில்வே முனையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஓராண்டு ஆகும். அதன்பிறகு, அடுத்த கட்ட பணிகள் தொடங்க திட்டமிடப்படும். சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார்.