கோவை மாவட்டத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா மற்றும் பேரூர் ஆதீனம் சார்ந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பங்கேற்பு பல்வேறு விமர்சனங்களுக்கு இடமளித்துள்ளது. இந்த விழாவில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் போது, எஸ்.பி.வேலுமணியும், அண்ணாமலையும் அருகருகே அமர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

முன்னதாக மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வீடியோவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டது, திமுகவின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே, கோவையில் நடந்த இந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் வேலுமணி பங்கேற்றது, அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதாரமா என்ற கேள்வியைக் தூண்டியுள்ளது.
மேலும், இந்த நிகழ்வின் போது எஸ்.பி.வேலுமணி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு முருகனின் சிறிய சிலையையும், அவரது சகோதரர் அன்பரசன் வேல் பரிசையும் வழங்கினர். இது, நிகழ்வின் மதவாத தன்மையை வலுப்படுத்துவதாகவும், அதிமுக பாஜகவின் மதவெறி நடவடிக்கைகளுக்கு அமைதியாக ஒத்துழைக்கிறது என விமர்சிக்கப்படுகிறது.
திராவிட இயக்கத்தை தன்னுடைய அடையாளமாக கொண்ட கட்சியின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள், இந்துத்துவ நிகழ்வுகளில் பங்கேற்பது கட்சியின் அடிப்படை சிந்தனைகளுக்கே விரோதமானது எனப் பல்வேறு எதிர்க்கட்சி பேச்சாளர்கள் தெரிவிக்கின்றனர். இது அதிமுக கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. பாஜகவின் மதவாத அரசியலில் ஓரங்கட்டப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே உருவாகியுள்ளது. இது, எதிர்காலத் தேர்தல்களில் கட்சியின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.