சென்னை: சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு பகுதியின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வையால் மூடப்பட வேண்டும். அப்படியானால், 426 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட சென்னையின் பரப்பளவில் 144 சதுர கி.மீ (33 சதவீதம்) பசுமைப் போர்வையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட வனக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, சென்னையில் 22.70 சதுர கி.மீ (வெறும் 5.28 சதவீதம்) மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. இந்த சூழ்நிலையில், விரைவில் தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், “நகரத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க, கல்லறைகள், பூங்காக்கள், திறந்தவெளி நிலங்கள், சாலையோர குளங்கள், ஏரிக்கரைகள் போன்ற இடங்களில் மரக்கன்றுகளை நட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது மரக்கன்றுகள் நடப்படும்போது, அவை இயற்கையாகவே சிறப்பாக வளர வாய்ப்புள்ளது.
எனவே, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலமரம், அரச மரம், செண்பக மரம் போன்ற பூர்வீக மரங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட மரங்கள் அனைத்து இடங்களிலும் நடப்பட உள்ளன. நகர மண் வகைக்கு ஏற்ற சாலைகளின் அகலத்திற்கு ஏற்ப உள்ளூர் மர வகைகள் நடப்படும். பறவைகளுக்கு உணவாக இலந்தை, நாவல், அத்தி, கொடுக்காப்புளி போன்ற பழ மரங்களும் நடப்பட உள்ளதாக அவர் கூறினார்.