பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே செருபாலக்காடு கிராமத்தில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக மற்றும் கிராமத்தினர் சார்பில், மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல், சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, கொடியசைத்து மாட்டு வண்டிப் பந்தயத்தை துவக்கி வைத்தனர்.
பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, கரிச்சான் குதிரை என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் மதுரை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு மொத்தப்பரிசாக ரூ.4.25 லட்சம் வழங்கப்பட்டது.
இரண்டாவது போட்டியான கரிச்சான் மாடு எல்கைப் பந்தயம் தொடங்கவிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கடும் மழை கொட்டத் தொடங்கியது. கொட்டும் மழையிலும் வண்டிப் பந்தயம் நடைபெற்றதும், மாடுகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்தன.
பந்தயம் நடைபெற்ற சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் சாலையின் இரு மருங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பந்தய ரசிகர்கள் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். பட்டுக்கோட்டை டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.