சென்னை: ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 4-ம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் சீரழிவு பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 4-ம் தேதி மாநகரம், நகரங்கள், கிராமங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகை அளித்து, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என அனைத்துப் பகுதி மக்கள் மீதும் வரிச் சுமையை ஏற்றி, செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டிக்கும் அரசு அரசியல் பாரபட்சத்துடன் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பதன் மூலம் தன்னிச்சையாக அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைக்கு எதிராக நடைபெறும்.
இந்தப் போராட்டத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், வணிகர்கள், ஜனநாயக இயக்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு முழு ஆதரவை வழங்குமாறு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.