ஆலந்தூர்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை… சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் நடந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலம், சென்னையை மையமாக வைத்து இந்த தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. இதற்கு சென்னை விமான நிலையத்தில பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்து யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சபீர் அலி, அவரது கடையில் வேலைபார்த்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கடைகள் நடத்தும் உரிமம் பெற யூடியூப்பர் சபீர் அலி கொடுத்த ரூ.77 லட்சம் ஹவாலா பணம் என்பதும், அவருக்கு சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த தங்கம் கடத்தலில் தொடர்பில் இருந்து உள்ளார். அவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.
அந்த அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த தங்கம் கடத்தலில் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் அடுத்தடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் சிக்கி வருகிறார்கள்.
இதேபோல் விமான நிலையத்தில் செயல்பட்ட மேலும் 3 கடைகளுக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாகவும் அதிரடி விசாரணை நடந்து வருகிறது.
எனவே வரும் நாட்களில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.