ஸ்ரீவில்லிபுத்தூர்: சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். அதிமுக, கூட்டணி குறித்து மூத்த நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும், அதிமுக உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனது குடும்ப குலதெய்வமான செண்பகத்தோப்பு வனபேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
இன்று கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைக்கிறார். அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, கோவிலுக்கு வரும்போது அரசியல் பேசக்கூடாது எனத் தெரிவித்தார்.