சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
நேற்று (செப்டம்பர் 6) மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (செப்டம்பர் 7) காலை 8.30 மணியளவில், அது வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
மேலும் இது வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு வங்கம்-வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரும்.
இதன் காரணமாக இன்றும் (செப்டம்பர் 7) நாளையும் (செப்டம்பர் 8) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 13 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இன்று முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
அதேபோல், இன்று (செப்டம்பர் 7-ம் தேதி) முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.