டெல்லி: சீன டீப்சீக் செயலி தீங்கு விளைவிப்பதாக இருந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகளை மீறுவதால் டீப்சீக் செயலியை தடை செய்ய அவசர விசாரணை கோரி ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா பெஞ்சில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், டீப்சீக் செயலி பயனர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால், அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளனர். மாறாக, அதைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குவதற்கான நடைமுறை உள்ளதா? மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய அவர்கள், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க எந்த அடிப்படையும் இல்லை என்று கூறி அவசர விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.