சென்னை: மழைக்காலம் வருவதால் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 9 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,480 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சின்ன போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ கணபதி, திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 16 லட்சத்து 73 ஆயிரத்து 374 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.821 கோடி செலவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் ரூ.25.86 லட்சம் மதிப்பில் 82,512 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 1,480 மாணவர்களுக்கு ரூ.71.38 லட்சத்தில் சைக்கிள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் டெங்குவால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அந்த நிலை இப்போது இல்லை. கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், தமிழக எல்லையில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து எல்லை தாண்டி வருபவர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொழுநோய் சிகிச்சைக்காக தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மர்மக் காய்ச்சல் இல்லை. மழைக்காலம் வருவதால், தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.