காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்திலும் பங்கேற்று, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறையானது பரந்தூர் விமான நிலையத்திற்காக ஏகனாபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து மக்கள் மனு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது போராட்டம் நடைபெற்று வரும் ஏகனாபுரத்தில் 152.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு தொடர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைத்தனர்.
இந்த சாலை மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 125 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏகனாபுரம் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு மொத்தமாக வெளியிடாமல் பகுதிகளாக அரசு சார்பில் வெளியிடப்படுகிறது.
மக்கள் ஒன்று கூடி போராடுவதை தடுக்கும் யுக்தி இது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்நிலையில், ஏகனாபுரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த செப். வரும் 3-ம் தேதி கூடி விவாதிக்க உள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய போராட்டக்குழு செயலாளர் கே.சுப்பிரமணியன் கூறுகையில், ”அடுத்த கட்ட போராட்டம் குறித்து வரும் செப். 3-ம் தேதி ஆலோசிக்க உள்ளோம்.
நமது போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் நாம் தமிழர் அமைப்பு தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் எங்கள் பகுதிக்கு அழைத்து வந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’’ என்றார்.