நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத அமாவாசை நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று காலை 5 மணி முதல் 10 மணி வரை வடைமாலை அலங்கார பூஜையும், 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு பொன்னாடை அணிவித்து அருள்பாலிக்கிறார். இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் நகரில் காலை 9 மணி முதல் இரவு வரை கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதேபோல் நகரில் வாகன போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.