சென்னை: தென் மண்டலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்ட 10 காவல் நிலையங்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கேடயங்களை வழங்கினார். தமிழ்நாடு காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில், திறன் மேம்பாடு, சேவை உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மாநில அளவில், நகரம் மற்றும் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் தமிழக முதல்வர் கேடயம் வழங்கப்படுகிறது.
அதன்படி கடந்த குடியரசு தின விழாவின் போது மாநிலத்தின் முதல் 3 காவல் நிலையங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார். அடுத்த கட்டமாக மண்டல வாரியாக முதல் 10 காவல் நிலையங்களுக்கு கேடயம் வழங்கப்படுகிறது. அதன்படி, தெற்கு மண்டலத்தில் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட 10 சிறந்த காவல் நிலையங்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கேடயங்களை வழங்கினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையம், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலையம், திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலையம், இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையம், ஏ. தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம், கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் காவல் நிலையம் என 10 காவல் நிலையங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. இதை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.