சென்னை: “மழை வெள்ளத்தால் மதுரை நகரம் தத்தளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் திமுக அரசு அலட்சியமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் நகரின் பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மதுரை கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு, பால், மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், மழைநீர் செல்லும் வகையில் கால்வாய்கள், ஓடைகளை முறையாக துார்வாராததே பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவும், வரும் கனமழையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.