அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை ‘ஹீமோ டயாலிசிஸ்’ என்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள சிறுநீரக மருத்துவர்கள், ரத்தநாள மருத்துவ நிபுணர்கள், இருதயநோய் நிபுணர்கள் போன்றவர்களின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு அவசியம்.
ஹீமோ டையாலிசிஸ் சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்களும் தேவை. இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கும் வழக்கமான இரத்த பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் தனியார் பங்களிப்புடன் செயல்படும் டயாலிசிஸ் மையங்களை அரசு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு மருத்துவ சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது. அவற்றை அரசு தொடர்ந்து நடத்தும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய சுகாதார ஆணைய இயக்குனர் அருண் தம்புராஜ் கூறியதாவது:- பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சுத்திகரிப்புக்கான டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதற்கான தொழில்நுட்பமும் பணியாளர்களும் போதுமான அளவில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை சிறப்பாக செயல்படுகிறது. எனவே, தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற பேச்சு அடிபடுகிறது. டயாலிசிஸ் சிகிச்சை முறையை அரசு தொடர்ந்து செயல்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.