தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் நெல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு செய்ய வருவார்கள் என்று வெகு நேரமாக காத்திருந்த விவசாயிகள் ஆய்வுப்பணி ஒத்தி வைக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.
தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், சுமார் 6.50 லட்சம் ஏக்கரில்,குறுவை சாகுபடி செய்யப்பட்டு,80 சதவீத அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதில், அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் விவசாயிகள் சாலைகளில் நெல்லை குவித்து வைத்து பல நாட்களாக காத்திருக்கின்றனர்.
இதனால், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்.16ம் முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியதால், அவ்வப்போது மழை பெய்து, மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில்,நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசிடம் தமிழக அரசு சில நாட்களுக்கு முன் அனுமதி கேட்டது.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு தலா 3 அதிகாரிகளைக் கொண்ட 3 குழுக்களை அமைத்துள்ளது. இதில், ஒரு குழுவில் ஒரு துணை இயக்குனர் மற்றும் இரண்டு தொழில்நுட்ப அலுவலர் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி, முதல் குழுவில் ஷாகி, ராகுல் சர்மா, தனுஜ் சர்மா, 2ம் குழுவில் பி.கே.சிங், ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா, 3ம் குழு வில் பிரீத்தி (உதவி இயக்குனர்), பிரியா பட், அனுபமா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் இரண்டாவது குழுவில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர் தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று காலை நெல்லில் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய வருகை தருகின்றனர் என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து மத்திய குழுவினரிடம் தங்களின் வேதனையை தெரிவிக்க விவசாயிகள் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் நிர்வாக காரணங்களால் மத்திய குழுவின் ஆய்வுப்பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வெகு நேரமாக காத்திருந்த விவசாயிகள் வெகுவாக ஏமாற்றம் அடைந்தனர்.