சென்னை: திமுக சட்டச் செயலர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம்.பி. இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கை:- 10 ஆண்டு கால வங்கிக் கடன் வழக்கை தூசி தட்டி, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை குறித்து, ஆதாரம் இல்லாமல் பல தவறான தகவல்களை அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனம் வங்கிக் கடன் வாங்கியது தொடர்பாக சென்னையில் அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கை. இந்தக் கடனை முழுமையாக வட்டியுடன் செலுத்தி விட்டதால், இதில் முறைகேடு இல்லை.
மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு முதன்மையான ஆதாரம் இல்லை என்று கூறி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக காரணமே இல்லாமல், சட்டத்தின் மீது இத்துறையினர் கதை கட்டி உள்ளனர்.

முனிசிபல் நிர்வாகத் துறை தொடர்பான முதல் தகவல் அறிக்கையோ, குற்றப்பத்திரிகையோ, வழக்கு நிலுவையில் இல்லாத நிலையில், அதன் செயல்பாடுகளை விசாரிக்க அமலாக்க இயக்குனரகத்துக்கு அதிகாரம் இல்லை. இந்நிலையில், புதிதாக இணைந்த கூட்டணி கட்சியை திருப்திப்படுத்த, அமலாக்க இயக்குனரகம் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற சட்ட விரோத செயல்களை அமலாக்க இயக்குனரகம் மேற்கொள்வதும், ஊழல் குறித்து ஆதாரம் இல்லாமல் பொது அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கையாகி விட்டது. சட்டப்படி செயல்பட வேண்டிய அமலாக்க இயக்குனரகம், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக இதுபோன்ற அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது நியாயமில்லை.
இதுபோன்ற அனைத்து அரசியல் பழிவாங்கல்களையும் தேவையான சட்ட நடவடிக்கை மூலம் எதிர்கொண்டு முறியடிப்போம்.