சென்னை ஐகோர்ட் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஓடிபி எண் பெற தற்காலிக தடையை விதித்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்துர்கர் அமர்வு, அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு தொடக்கமாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக நடத்தும் உறுப்பினர் சேர்க்கை முகாமில், பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி சேகரிக்கின்றனர்” எனக்கூறி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பெண்களிடமிருந்து மிரட்டிக்கொண்டு பெறும் முயற்சி நடப்பதாகவும், அந்த விவரங்களை அரசியல் நோக்கில் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், சேகரித்த தகவல்களை அழிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதையடுத்து மதுரை ஐகோர்ட், ஓடிபி எண் பெற தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், உறுப்பினர் சேர்க்கையைத் தடை செய்யவில்லை.
திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், பொதுமக்கள் தங்களது விருப்பத்தின்படி இணைந்துள்ளனர், எந்த வற்புறுத்தலும் செய்யப்படவில்லை என வாதிடப்பட்டது. ஆனால், நீதிபதிகள், “இந்த விவகாரம் முக்கியமானது, சந்தேகத்திற்குரியது. உயர்நீதிமன்றத்தையே நாடுங்கள்” என கூறி, திமுக மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.