சென்னை: தமிழக அரசு அளித்துள்ள தகவலின்படி சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது. இதன் கொள்ளளவு 7.32 டிஎம்சி. நவம்பர் 30-ம் தேதி காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.55 அடியாக இருந்தது. அதாவது ஒன்றரை அடி நீர்மட்டம் உயர்ந்திருந்தால் அணை நிரம்பி பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்.
அணையின் மொத்த நீர்பிடிப்பு பகுதி 170 செ.மீ. மழைக்காலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதை உணர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்தும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அணையில் இருந்து நீர்மட்டத்தை குறைக்காதது ஏன்? கடந்த 1-ம் தேதி இரவு 10 மணிக்கு 4-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அப்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 30 ஆயிரம் கன அடியாக மட்டுமே இருந்தது. படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நள்ளிரவு 2 மணிக்கு 1.30 லட்சம் கனஅடி திறக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும், கூடுதல் நீர் திறப்பு குறித்து புதிய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. வினாடிக்கு 30,000 கனஅடி திறக்கப்படும் என்று கூறிவிட்டு, 1.30 லட்சம் கனஅடி திறக்கப்பட்டால், அதை எப்படி மக்கள் சமாளிக்க முடியும். 2-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 5-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், அரசு தரப்பில் கூறப்பட்டபடி அதிகாலை 2.45 மணிக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளிப்படுத்தியுள்ளது. அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாலை 4.15 மணிக்குத்தான் செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு நீர்வளத்துறையின் எச்சரிக்கை சென்றடையவில்லை.
எச்சரிக்கை விடப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன், அணையில் இருந்து 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 2015-ல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் படிப்படியாக திறக்கப்படாமல், ஒரேயடியாக திறக்கப்பட்டதால் பேரழிவு ஏற்பட்டது. சாத்தனூர் அணை திறப்பு விவகாரத்திலும் அதே தவறை திமுக அரசு செய்துள்ளது. இவ்வாறு அன்புமணி கூறினார்.