தஞ்சாவூர்: நாஞ்சிக்கோட்டை ஊராட்சியை தஞ்சாவூர் மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளிம்பு நிலை மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சி அருகே உள்ள 13 ஊராட்சிகள் தஞ்சை மாநகராட்சி உடன் இணைக்கப்பட உள்ளது. நாஞ்சிக்கோட்டை, விளார், புதுப்பட்டினம், பிள்ளையார்பட்டி, மேலவெளி, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், ராமநாதபுரம், மணக்கரம்பை, நீலகிரி, கடகடப்பை, இனாத்துக்கான்பட்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சிகள் தஞ்சை மாநகராட்சி உடன் இணைக்கப்பட உள்ளது.
இதனால் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தினம் தோறும் மாவட்ட ஆட்சியரிடம் எங்களது பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என மனு அளித்து வருகின்றனர். அவ்வாறு மாநகராட்சியுடன் எங்கள் ஊராட்சிகளை இணைத்தால் எங்களுக்கு கிடைக்கக்கூடிய 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும். அதேபோல் குடிநீர் வழி சொத்து வரி மின்சார வரி உள்ளிட்ட அனைத்தும் அதிக அளவில் செலுத்தும் நிலை வரும். எங்கள் பகுதியில் நாங்கள் 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறோம்
அதனால் எங்களது ஊராட்சிகளை தஞ்சை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என மாவட்ட கலெக்டர் இடம் மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி 5ம் தேதியுடன் ஊராட்சி மன்ற தலைவருக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து அனைத்து ஊராட்சிகளிலும் மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியை தஞ்சை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி தஞ்சை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விளிம்பு நிலை மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அவ்வாறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.