சென்னை: தமிழகத்தில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு வசூலிக்கப்படும் மின் கட்டணத்தில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். அதில் ஒரு யூனிட்டுக்கு மின் கட்டணம் ஒரு சாதாரண குடிமகனுக்கு ரூ. 7.85, ஒரு கோவிலுக்கு ரூ. 7.85, கோசாலை பசு மடத்துக்கு ரூ. 7.85, ஒரு மசூதிக்கு ரூ. 1.85, ஒரு தேவாலயத்திற்கு ரூ. 1.85 என்று கூறியிருந்தார்.
பலர் இதைப் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு நிறுவனம் ஒரு பதிவில் கூறியதாவது:- மத வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு இருப்பதாக 2019 முதல் தகவல் பரவி வருகிறது. இது ஒரு வதந்தி.

தமிழ்நாட்டில், கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் அனைத்தும் ‘பொது வழிபாட்டுத் தலங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்திற்கும் ஒரே மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டின் கட்டண அட்டவணையின்படி, கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட பொது வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், முதல் 120 யூனிட்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 3.13 அரசு மானியம் வழங்கப்படுகிறது. எனவே, வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.