சென்னை: வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டப்பட்டினம், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையின் தொடரும் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு, ஒவ்வொரு கைதுக்குப் பிறகும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது எந்த வகையிலும் உதவாது.
எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவித்து, தமிழக மீனவர்கள் வருங்காலத்தில் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்,” என்றார்.