ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் வரத்து குறைவால் வாழை இலை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உணவகங்களில் வாழை இலைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒட்டன்சத்திரத்தில் வரத்து குறைவால் வாழை இலை விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.700க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.2500க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் 20க்கும் மேற்பட்ட வாழை இலை மொத்த விற்பனை கடைகள் உள்ளன.
இந்த கடைகளின் உரிமையாளர்கள் மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழை இலைகளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். பின்னர் அவைகளை 200 இலைகள் கொண்ட கட்டாக கட்டி விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.700க்கு விற்பனையானது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவால், ஒட்டன்சத்திரம் கடைகளுக்கு வாழை இலை வரத்து குறைந்துள்ளது.
இதனால், தற்போது 200 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வாழை இலை வியாபாரிகள் கூறுகையில், ‘‘தொடர் முகூர்த்த தினங்கள், தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் வாழை இலை தேவை அதிகமாக உள்ளது. சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மரத்திலேயே வாழை இலைகள் கருகி விடுகின்றன.
இதனால் வாழை இலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சில மாதங்களுக்கு தொடரும்’ என்றனர்.