புதுடெல்லி: டெல்லியில் காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்மின்சாரத்துறை அமைச்சரை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பிரச்னை நிலவி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆடி மாதத்துக்கு 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என 32வது காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் வலியுறுத்தினார். இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றார்.
மாலையில் அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்மின்சாரத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து காவிரி நீர் பங்கீடு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.