சென்னை: நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கியதற்காக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு, உணவு பாதுகாப்பு துறையின், ‘ஈட் ரைட் கேம்பஸ்’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றான ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 12,000 வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். இதேபோல், 3,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு படுக்கை வசதி உள்ளது.
உள்நோயாளிகளுக்கு தகுந்த உணவும் மருத்துவமனை நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நோயாளிகளுக்கு குழந்தைகள் உணவு, வயது வந்தோர் உணவு, தொற்று நோய் அல்லாத உணவு, உப்பு சேர்க்காத புரதச்சத்து அதிகமுள்ள உணவு, புரதச்சத்து அதிகம் உள்ள உணவு, கதிர்வீச்சு மற்றும் கீமோ உணவு, உணவுக் குழாய் உணவு, ரொட்டி-பால் உணவு, என 10 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. சிறுநீரக சிகிச்சை நோயாளிகளுக்கு உணவு, மற்றும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட்ட உணவு வழங்கப்படுகின்றன.
இந்த உணவுகளை சமீபத்தில் ஆய்வு செய்த சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற சான்றிதழை வழங்கியுள்ளனர். இந்தச் சான்றிதழைப் பெற்ற தமிழகத்தின் முதல் அரசு மருத்துவமனை என்ற பெருமையை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை பெற்றுள்ளது. சான்றிதழை மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் பெற்றுக்கொண்டார்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்குவதை ஊக்குவிக்க உணவு பாதுகாப்பு, சுகாதார உறுதி, சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட விழிப்புணர்வு ஆகிய 4 வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறையால் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் மருத்துவமனை வளாகங்கள் வழங்குவது குறிப்பிடத்தக்கது.