சென்னை: டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், ‘இது ஒரு சாதாரண தீ விபத்து அல்ல; டீசல் ஒரு ரசாயனம் மற்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும்’ என்றும் எடப்பாடி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-
“திருவள்ளூர் அருகே பெரியகுப்பம் வரதராஜன் நகர் பகுதியில் டேங்கர் ரயிலில் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்தன. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் முயற்சித்த போதிலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று தகவல்கள் வருகின்றன.

மத்திய மற்றும் மாநில பேரிடர் நிவாரணப் படைகளை உடனடியாக ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றி, அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.
விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு சாதாரண தீ விபத்து அல்ல; டீசல் ஒரு ரசாயனம் என்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவும், மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.