மேட்டூர்: காவிரி ஆற்றின் நடுவில் சிக்கி தவிக்கும் 7 நாய்களை மீட்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மழை கால நீர் போக்கி வழியாக தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே 16 கண் மதகு அருகே காவிரி ஆற்றில் நடுவில் உள்ள மலை குன்றுகளில் 7 நாய்கள் சிக்கிக் கொண்டது. இந்த நாய்களை மீட்க அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவின் பேரில் ராட்சத டிரோன் மூலம் நாய்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து 7 நாய்களையும் மீட்பதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் தண்ணீரின் வேகமாக அதிகமாக இருப்பதால் நாய்களை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது.
16 கண் நீர் போக்கியில் தண்ணீர் நிறுத்தினால் மட்டுமே நாய்களை மீட்க முடியும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். தண்ணீர் திறப்பு நிறுத்தும் வரை நாய்களுக்கு தேவையான உணவுகளை வழங்க வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.