சென்னை: மாநிலம் தழுவிய இன்று நடைபெற இருந்த போராட்டத்துக்கு அனுமதி கோரி மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலர் சி.பாலசந்தர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் தொழிலாளர்களை விரைவில் பணி நிரந்தரம் செய்வதாக தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.
ஆனால் அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, மின்வாரிய ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, இன்று அனைத்து மாவட்ட மின் வாரிய தலைமையகத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அனுமதி கோரி, தமிழக டிஜிபியிடம் பிப்ரவரி 4-ம் தேதி மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “இந்த போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். மனுதாரர்கள் இதுவரை அத்தகைய அனுமதியைப் பெறவில்லை” என்றார். அதைத் தொடர்ந்து மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டத்துக்கு அனுமதி கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.