சென்னை: போலீஸ் விசாரணை குறித்த அடிப்படை அறிவும் இல்லாத எடப்பாடி பழனிசாமி காவல்துறையின் பொறுப்பில் இருந்ததை நினைவூட்டிய அமைச்சர் சிவசங்கர், அவரது ஆட்சி காலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து உயர்நீதிமன்றமே கண்டித்ததை சுட்டிக்காட்டினார். ராணிப்பேட்டையில் பாமக நிர்வாகி சக்கரவர்த்தி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கி கலாச்சாரம் குறித்து எடப்பாடி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார் அமைச்சர்.

சக்கரவர்த்தி வழக்கில் போலீசார் 3-வது நாளிலேயே முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததை அமைச்சர் எடுத்துரைத்தார். அவர் வீட்டிற்குச் செல்வதற்காக பைக்கில் புறப்பட்டபோது சாலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். உடற்கூறு ஆய்வில் துப்பாக்கி மூலம் சுட்டுக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதும் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனைக் குறிப்பிட்டு, மரணம் தொடர்பான தெளிவான தகவல் இல்லையெனில் வழக்குகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பது குறித்து சட்ட அடிப்படைகளை விளக்கினார்.
அதே நேரத்தில், முன்னாள் முதல்வராக இருந்த பழனிசாமிக்கு இத்தகைய அடிப்படை தகவல்களே தெரியவில்லை என்பது கவலையளிக்கிறது என்றார். சட்டம், நடைமுறைகள், விசாரணை முறைகள் போன்றவை சாதாரண பாமரருக்குக் கூட தெரிந்தவை என தெரிவித்த சிவசங்கர், பழனிசாமி முதலமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் என்று கடுமையாக விமர்சித்தார். காவல்துறை அமைச்சராக இருந்த அவர், இவ்வளவு சிக்கலான விசாரணைகளில் அடிப்படை அறிவு இல்லாமல் இருந்தது சோகமானது என சாடினார்.
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ஆதரவாக நடந்ததே பாமக நிர்வாகி சக்கரவர்த்தியின் கொலையின் காரணம் என்றும், அதைப் பற்றி எடப்பாடி எதையும் சொல்லவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். பாமகவுடன் கூட்டணியில் சேர முயல்வதற்காகவே சக்கரவர்த்தி கொலை குறித்து போலியான அறிக்கையை எடப்பாடி வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். குற்றச்சம்பவங்களை அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்தும் முயற்சியில் பழனிசாமி ஈடுபட்டுள்ளதாக கூறினார்.