மத்திய அரசின் தகவல் மற்றும் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்ட ‘பாரத் நெட்’ திட்டம், இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளை டிஜிட்டல் முறையில் இணைக்க பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் இணைப்பதும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 1 ஜிபிபிஎஸ் அதிவேக இணைய இணைப்பை வழங்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதுகுறித்து, ‘பாரத் நெட்’ தமிழ் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‘பாரத் நெட்’ திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ. 1,815.31 கோடியில் இணைய இணைப்புகள் வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இக்கிராமங்கள் பயன்பெறும் வகையில், 57,500 கி.மீ., நீளத்திற்கு ஆப்டிகல் ஃபைபர் அமைக்கும் பணி, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் சிறப்பு நோக்க வாகனமான, தமிழ்நாடு ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் கார்ப்பரேஷன் (TANBNET) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ‘பாரத் நெட்’ திட்டத்தின் மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணி 91.8 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 11,507 கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டு அதிவேக இணையதள சேவையைப் பெற்று வருகின்றன. இக்கிராமங்களில், 48,082 கி.மீ., மேல்நிலை மின்கம்பிகளும், 5,107 கி.மீ., நிலத்தடி ஆப்டிகல் ஃபைபரும், ஊராட்சி ஒன்றியங்களில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.