கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொட்டையூரில் அரசு கவின் கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கும்பகோணம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த கல்லூரியில் இளங்கவின் கலைப் பட்டப் படிப்பில் காட்சி வழித் தொடர் வடிவமைப்பு, வண்ணக் கலை, சிற்பக்கலை ஆகிய 3 பிரிவுகளிலும், முதுகலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் படைப்புகளை ஆண்டுதோறும் கண்காட்சியின் வாயிலாக காட்சிப்படுத்துவது வழக்கம். அதன்படி நேற்று கல்லூரி மாணவ-மாணவிகளின் படைப்புகளின் கண்காட்சி நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். கல்லூரி விரிவுரையாளர் ராதா வரவேற்றார். அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரி தலைவர் டிராட்ஸ்கி மருது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட உதவி கலெக்டர் கார்த்திக் ராஜா(பயிற்சி) குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளின் 250 வகையான தொடர்வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பகலை ஓவியங்கள் சிற்பங்கள் காட்சி படுத்தப்பட்டன. மாணவ-மாணவிகள் தயார் செய்த அரசியல், சுற்றுசூழல், உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பற்றிய ஓவியங்கள் பயிற்சி கலெக்டர் கார்த்திக்ராஜா பார்வையிட்டு விளக்கம் கேட்டறிந்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
வருகிற 30-ந் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சிக்கு பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளதாக கல்லூரி முதல்வர் ரவி தெரிவித்தார். முடிவில் முதுநிலைவிரிவுரையாளர் அருளரசன் நன்றி கூறினார்.