தமிழ்நாடு சட்டசபையில், அதிமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கடும் விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே வாக்குவாதம் நடந்தது.

எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு ஒருபோக்கு நடத்தை காட்டுவதாகக் குற்றம்சாட்டி, அவையில் அதிமுக உறுப்பினர்களின் உரைகளை ஒளிபரப்பில் மறைக்கும் செயல் நடக்கிறது என்றார். அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் கிண்டல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
முதல்வர் ஸ்டாலின், மக்கள் நம்பிக்கையை இழந்தவர்கள் கொண்டு வந்த தீர்மானம் நகைப்பிற்குரியது என்று தெரிவித்தார். அவர், கருணாநிதியின் அரசியல் பாரம்பரியம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நினைவுபடுத்தி, சபாநாயகர் அப்பாவு நடுநிலைமையாக செயல்படுவதாக கூறினார்.
அவர் 2006-2011 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நேர்மையாக செயல்பட்டதை நினைவுபடுத்தினார். பேரவையின் மரபுகள் மீறப்படாமல் சட்டமன்றம் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே அவரைத் தேர்வு செய்ததாக தெரிவித்தார்.
தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, துணை சபாநாயகர் அவையை நடத்தினார். அதிமுக உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாதிட்டனர், ஆனால் குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வியடைந்தது. பின்னர் டிவிஷன் முறையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 154 பேர் தீர்மானத்திற்கு எதிராகவும், 63 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். பாஜக, பாமக போன்ற கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த பிறகு, சபாநாயகர் அப்பாவு மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார்.