சென்னை: பனை மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதி கோரி சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பனை, தென்னை மரங்களில் கள்இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், கிராமணி சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இதில் திரைப்பட இயக்குனர் கவுதமன், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் ஏ.எஸ்.பாபு மற்றும் 200க்கும் மேற்பட்ட பனை, தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளும் விவசாய விளைபொருள் என்பதை மதித்து தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குமதி செய்து, விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
அதேபோல் பாமாயில் சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என நிரூபிக்கப்பட்ட நிலையில் பொது விநியோக திட்டத்தில் இருந்து பாமாயில் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும். மாறாக பொது விநியோகத் திட்டத்தில் தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை விற்பனைக்கு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தியே உண்ணாவிரதம் இருந்துள்ளோம் என்றார்.