நாகர்கோவில்: தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி:- ஆளுநராக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதிக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்ந்து மரியாதைக் குறைவாக நடந்துகொண்டுள்ளார். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும் அவர் ஒப்புதல் அளிப்பதில்லை.
பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால், அதற்கு அவர் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அவர் வேண்டுமென்றே ஜனாதிபதிக்கு அனுப்புகிறார். இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்துவதில்லை. படித்த ஐபிஎஸ் அதிகாரி இப்படி செய்யலாமா? அவர் வகிக்கும் பதவிக்கும், இந்திய ஜனநாயகத்துக்கும் எதிராக செயல்படுகிறார்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் இந்தியா மதம் சார்ந்த நாடு என்று கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை புகுத்துவதாக ஆளுநர் எங்கும் பேசி வருகிறார். இதற்கெல்லாம் சுப்ரீம் கோர்ட் நல்ல முடிவு வரும். திருவள்ளுவர் சிலைக்கு காவி வண்ணம் பூசுவது ஆளுநரின் சிறுபிள்ளைத்தனமான செயல்களில் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.